சுனாமி – என் நினைவுகள்

2004ம் ஆண்டு டிசெம்பரில் இலங்கை உட்பட ஏராளமான நாடுகளை சுனாமிப் பேரலைகள் தாக்கி இன்றுடன் 8 வருடங்கள் கடந்துவிட்டன.

என்னைப் போன்று நேரடியான பாதிப்புகளின்றித் தப்பியவர்களுக்கு இந்த 8 ஆண்டுகள் “கடந்து போயிருக்கின்றன”, ஆனால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பலருக்கும் இந்த 8 ஆண்டுகள் வாழ்க்கையின் சோகமான காலங்களாகவே அமைந்திருக்கும், இன்னும் பலர் அந்த தாக்கங்களிலிருந்து விடுபடவில்லை என்பது பொதுவான ஒரு விடயம்.

யாழ்ப்பாணத்தில் கச்சேரி/அரியாலைப் பகுதியில் வசித்ததால் எங்கள் வீட்டுப் பக்கத்தில் கடல் இல்லாததால் எங்கள் வீடுகளுக்கு சுனாமி ஆபத்து ஏற்பட்டிருக்கவில்லை.எங்கள் வீட்டிலிருந்து சில கிலோ மீற்றர்கள் தள்ளிக் காணப்படும் கரையோரப் பகுதிகளான பாசையூர் உட்பட சில பகுதிகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

அஞ்சலிகள், நினைவுகள்!

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை.
கோவிலாக்கண்டியில் காணப்படும் எங்கள் பரம்பரைக் கோவில் (சரியான சொல் தெரியவில்லை. அந்தக் கோவில் எங்கள் பரம்பரையின் கட்டுப்பாட்டில் இருந்தது என நினைக்கிறேன். வேறு தெரியவில்லை.) பூசைக்காக கோவிலாக்கண்டி சென்றிருந்தோம்.

தொலைக்காட்சி, வானொலிகளெனப் பெரிய வசதிகள் இல்லாத பகுதி, மின்சாரம் இருந்ததா என எனக்கு ஞாபகமிருக்கவில்லை.
10ம் ஆண்டு முடிந்து விடுறைக்காலத்தில் இருக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனிடம் கைத்தொலைபேசியும் இருந்திருக்கவில்லை.

நாங்கள் காலையிலேயே அவ்விடத்தை அடைந்து விட்டதோடு, வேறு தொடர்பாடல் வசதிகள் இருந்திருக்காத நிலையில் சுனாமியின் தாக்கம் பற்றி எந்தவிதத் தகவல்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கவில்லை.
தனது கடமைக்காக காரைநகர்/ஊர்காவற்றுறைக்குச் சென்றிருந்த அக்காவின் கணவர் கோவிலுக்குத் தாமதமாக வந்து கடலில் அதிக அலைகள் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
அதை நாங்கள் யாரும் பெரிதுபடுத்தியிருக்கவில்லை.

கோவில் பூசைகள் முடிந்து 2 மணியளவில் வீட்டுக்குச் சென்று தொலைக்காட்சியைப் பார்த்தால் சுனாமியின் அழிவை உணர முடிந்தது.
தொலைக்காட்சிகள் அனைத்திலும் அதைப் பற்றிய பேச்சுத் தான்.

இன்றும் அந்தக் கணங்களை நினைத்துப் பார்க்கிறேன். மாபெரும் அழிவொன்று எங்கள் நாட்டில் இடம்பெற்ற போதிலும், 5 மணித்தியாலங்களுக்குப் பின்னர் தான் அதுபற்றிய தகவல்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றிருந்தன.

இப்போதைய காலமென்றால் நிச்சயமாக ட்விற்றர், பேஸ்புக், குறுஞ்செய்திகள், கைபேசி இணையங்கள் மூலமாக உடனடியாக அறிந்திருப்பேன்.

சுனாமியில் எங்களுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இறந்திருக்கவில்லை, நெருங்கிய நண்பர்கள் இறந்திருக்கவில்லை.
நண்பனொருவரின் சகோதரன்/சகோதரியொருவர் இறந்து மரண வீட்டில் கலந்து கொண்டிருந்தேன். அதைத் தவிர, நேரடியான இழப்பு அனுபவம் எனக்குக் கிடையாது.

மற்றவர்களின் இழப்புப் பற்றி அதிகமாக எனக்கு உணர வைத்தது என ஆசிரியர் ஒருவரின் அனுபவ வார்த்தைகள்.

2005ம் ஆண்டு 11ம் ஆண்டில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கும் போது நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்தை விருப்பப் பாடமாகக் கற்றேன். ஓவியம், இசை போன்ற துறைகளைக் காப்பாற்றும் பொருட்டே நாடகமும் அரங்கியலும் பாடத்தை விருப்பத் தேர்வாகக் கற்றேன்.

எங்களுக்கான நாடகமும் அரங்கியலும் பாடத்தை கிருஷ்ணா சேர் கற்பித்திருந்தாலும், College of Education இலிருந்து பயிற்சிக்காக வந்த நந்தன் சேர் தான் கற்பிப்பார்.
அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.

அந்தக் காலத்தில் “கனா கண்டேன்” திரைப்படப் பாடல்கள் வெளிவந்து “சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி” என்ற பாடல் பிரபலமாகியிருந்தது.
வைரமுத்து எழுதிய பாடல்.
ஏதோ ஒரு கலந்துரையாடலில் அந்தப் பாடல் பற்றிய கருத்து எழுந்தது.

நந்தன் சேர் உணர்ச்சி வசப்பட்டு ஒரு வார்த்தை சொன்னார். “சுனாமியின் அழிவை நேரில் உணர்ந்த ஒருவரால் ‘நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீ தான் சுனாமியோ’ என்ற வாக்கியத்தைப் பயன்படுத்தியிருக்க முடியாது”.
அனைவரும் அமைதியானோம்.

சற்று நேரத்தில் நந்தன் சேர் தனது அனுவத்தைப் பகிர்ந்தார்.

“எங்கள் வீட்டுப் பகுதிகளில் முழங்கால் அளவிற்கு மேல் தண்ணீர் புகுந்திருந்தது. உடமைகளை விட உயிர்களே முக்கியமானவையாகப் பட்டன.
ஏராமானோர் உடமைகளை விடுத்து உயிர்களுக்காகத் தப்பியோடினர். ஏராளமானோர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர்.
சில நிமிடங்களில் ஏற்படுத்திய அழிவு சொல்ல முடியாதது.

“சுனாமியில் சிக்கியவர்கள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் வெளியேறினார்கள், பிணமாக.

எம்மவர்கள் இறந்தவர்களின் உடல்களில் காணப்பட்ட நகைளை அபகரிப்பதற்காக இறந்தவர்களைத் தேடி அலைந்ததும் உண்டு. ஏராளமாக நடந்தது.
“அதை விடக் கேவலமாக, இறந்த பெண்களின் சடலங்களைப் பார்ப்பதற்காகச் சிலர் தேடி அலைந்தனர்.

“அலையின் தாக்கத்தால் பெரும்பாலானோரின் உடல்களில் ஆடைகள் காணப்படாது. அவ்வளவு மோசமான தாக்கத்தை சுனாமி ஏற்படுத்தியிருந்த நிலையில், கேவலமான செயற்பாடுகளுக்காக பெண்களின் உடலங்களைத் தேடி அலைந்தவர்களும் நம்மில் தான் உள்ளார்கள்”

“அந்த அழிவுகளை, அந்த ஆடைகளில்லாத உடல்களைப் பார்த்த, உணர்ந்த, அதுபற்றிக் கேட்டறிந்த ஒருவரால் ‘நான் கட்டும் ஆடை களவாடப் பார்க்கும் நீ தான் சுனாமியோ’ என்ற வாக்கியத்தைப் பாடலொன்றில் பயன்படுத்தியிருக்க முடியாது” சொல்லிவிட்டு கலங்கிய கண்களுடன் நந்தன் சேர் நிமிர்ந்தார், நாமும் கலங்கிய கண்களுடன் அவரைப் பார்த்தோம்.

அன்றிலிருந்து “சின்னச் சின்ன சிகரங்கள் காட்டி” பாடல் எரிச்சலை மாத்திரம் தந்துவிட்டுப் போகும் ஒன்றாக இருக்கிறது.

(திடீரென எழுதியது. அழகூரில் பூத்தவளே பாடல் ஒலிக்க ஆரம்பித்த போது எழுதத் தொடங்கினேன். அப்பாடல் முடிவடைந்து சில செக்கன்களில் பதிவும் முடிவடைந்துவிட்டது.)

Gopikrishna Kanagalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *